வியாழன், 19 நவம்பர், 2009

பசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்?


எட்டிக்காயும் இறைவன் படைப்பே. எள்ளும் அவன் படைப்பே. அன்னாசிப்பழமும் அரளிக்காயும் அவன் படைப்பே. இருந்தாலும், எள்ளும் அன்னாசிப் பழமும் மனிதருக்கு ஏற்றதாக இருப்பது போல எட்டிக்காயும், அரளிக்காயும் இன்னும் பலவும் இல்லை.


அருவி நீரும், ஆற்று நீரும், கிணற்று நீரும், கடல் நீரும், குளத்து நீரும், நீர் தான் என்றாலும், எல்லா நீரும் அனைத்து மனிதர்க்கும் ஒரே அளவிலும், எப்பொழுதும் எல்லாத் தேவைகளுக்கும் பயன் படுவதாக அமையவில்லை.

தொன்றுதொட்டு மனித இனம் தான் கண்டவற்றில், சிலவற்றையே மிக்க பயன் அளிப்பதாக அனுபவித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே, அவற்றை போற்றி பாராட்டி தெய்வமாகவும் வழிபட்டு வந்திருக்கின்றது..

மரங்களில் வாழையையும், தென்னையையும், வேம்பையும், நம்மிடம் நன்றி பாராட்டுவதில் நாயையும் போற்றுவது போல, பசுவையே எல்லா இனங்களுக்கும் மேலாக வணங்கி, அட்சய பாத்திரமாக வற்றா ஊற்றாக போற்றி வருகிறது.

வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்து வந்திருக்கிறது.

பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், பசுத்தாய், கோமாதா என்று வழங்கி வந்திருக்கிறது.

பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே.

3. ஐக்கிய ஸ்வரூபம் கோமாதா

எல்லாமே இறை வடிவம் என்றாலும், நாம் தொன்றுதொட்டு, சிலவற்றிலேயே, சில வடிவங்களிலேயே, அனைத்து குணங்களின் ஐக்கியத்தை உணர்ந்திருக்கிறோம்.

அர்த்த நாரீஸ்வரரில் சிவ-சக்தி ஐக்கியத்தையும்,
சங்கர நாராயணரில் சிவ-விஷ்ணு ஐக்கியத்தையும்,
லக்ஷ்மி நாராயணரில் விஷ்ணு-லக்ஷ்மி ஐக்கியத்தையும்,
நரசிம்மரில் மனித-மிருக ஐக்கியத்தையும்,
தாணுமாலயனில் ஹரி-ஹர-ப்ரும்ம ஐக்கியத்தையும்,
கணபதியில் யானை-தேவர்கள் ஐக்கியத்தையும்,
ஏகபாத த்ரிமூர்த்தியில் மூவரின் இணைவையும் காண்கிறோம்.

பலவற்றுள் ஐக்கியப்பாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் எல்லாமே சர்வ குண ஐக்கிய வடிவமே. யாவுமே நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு வகை அளவு கலவை வடிவமே.

ஆணும் பெண்ணும் வித்தியாசமாக தோன்றினாலும், இரு பாலாருமே 45 'X' 'Y' க்ரோமசோம்களின் கூட்டே. இவற்றில் ('X' 'Y' - ல்)ஒன்று கூடினால் ஆண் என்றும், மற்றொன்று கூடினால் பெண் என்றும் கூறுகிறோம்.

ஒவ்வொரு ஜீவ அணுவின் அடிப்படை அமைப்பான DNA, ஒரு மனிதரின் பல்லாயிரக் கணக்கான மூதாதையர்களின் குணங்களை உள்ளடக்கி இருப்பது போலவும், மிகச்சிறிய ஆலம் விதை பிரும்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போலவும், ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒருமை வடிவமாகும்.


இங்கு ஒரு முக்கியமான செய்தியை கவனிக்க வேண்டும். இந்து மதம் பசுமாட்டைத் தவிர வேறு எந்த இனமும் தெய்வசக்தியற்றது என்று கூறவில்லை.

காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங் கைகளைப் பார்த்து நுனிப்பகுதியில் மகாலக்ஷ்மியும், இடையில் சரஸ்வதியும், கணுப்பகுதியில் பார்வதியும், (முச்சக்திகளும் இருப்பதை) நினைவுபடுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது.

எனினும் தோட்டத்துக் கனியை அறியாமல் இருப்பதே பொது குணம் என்பதால் நாம் நம்மை அறிவதற்கு ஏதுவாக பரம்பொருளை, முதலில் பிறவற்றில் இருப்பதை உணர, பல வழிவகைகளை இந்து மதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிப்பாடு).

உலகில் உள்ள கோடிக்கணக்கான கீரை, காய், கனிகளையும், தெரிந்த பின்னரே சிலவற்றை உபயோகிப்போம் என்பதில்லை.

நமக்கு நன்மை அளிப்பதாக அறிந்ததை உடனே பயன்படுத்திடுகிறோம்.

இது போல பூச்சி முதல் பிரும்மாண்டமான இனம் வரை, ஒவ்வொன்றின் தெய்வ அம்சத்தை உணரும் வரை காத்திராமல், பசுமாடு போன்று, தெய்வாம்சம் அறியப்பட்ட இனங்களை வழிபட்டு பயன் பெறுவதே அறிவுடைமை.

நன்மை அளிப்பதாக அறிந்ததை மறந்திடக் கூடாது என்றும் கிடைத்த கனியை நழுவவிடக் கூடாது என்பதற்காகவும் துவங்கப்பட்டு தொடர்வதே கோமாதா பூஜையாகும்.

எல்லோரும் தத்தம் வீட்டிலேயே, பசு வழிபாடு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து, அன்றாடமும், கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆலயத்திலும் "கோ சாலை" (பசு மடம்) இருந்தால் அருகில்வாழ் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.

தினமும் பசுமடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு, முக்கிய நாட்களில் அல்லது பல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம். ஆலயத்திற்கு மட்டுமின்றி, அருகுள்ள மக்களுக்கு மட்டுமின்றி அகிலத்திற்கே அனைத்து நன்மையும் அளிக்கும்.

கோபூஜை செய்வோம் கஷ்டங்கள் தீரப்பெருவோம்.
பசுவை வழிபடுவோம் பரம்பொருளை அறிந்திடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக