திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-முகவுரை
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்*********************************************பிள்ளைத்தமிழ் இருவகையாம்.
இவையாவன: ஆண்பற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்.
பிள்ளைத்தமிழில் காப்பு முதல் அம்புலிப்பருவம் ஈறாக ஏழு பருவங்களும் இருபாலருக்கும் ஒன்றே.
மற்ற மூன்று பருவங்கள் வேறுபடும்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் - சிற்றில், சிறுபறை, சிறுதேர்பெண்பாற் பிள்ளைத்தமிழ் - அம்மானை, நீராடல், ஊசல்
பிள்ளைப்பருவம் களங்கமற்ற நல்லெண்ணத்தையும் அவ்வெண்ணத்தின் வழியே களங்கமில்லா தூய அன்பையும் விளைவிப்பதாம். இவ்வரிய குணங்களைப் பெற விரும்புவோர் உள்ளத்தைப் பிள்ளத்தமிழ்ப் பாட்டுக்களில் செலுத்தல்வேண்டும்.
பருவங்கள்:
காப்புப் பருவம் - இரண்டாம் மாதத்தில் பிள்ளையைக் காக்கவெனத் திருமால், சிவபெருமான், உமையவள், கணபதி, கலைமகள், அரிகரபுத்திரன், பகவதி, ஆதித்தன், முப்பத்துமுக்கோடி தேவர்கள் ஆகியோர்மீது பாடப்படுவது.
செங்கீரைப்பருவம் - செங்கீரை ஆடும் பருவம். ஐந்தாம் திங்களில், ஒரு காலை மடக்கி, ஒருகாலை நீட்டி, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலை நிமிர்த்தி, முகமாட்டும் பருவம்.
தாலப்பருவம் - ஏழாம் திங்களில் தாலாட்டைக் கேட்கும் பருவம். தாலாட்டு எனில் ஒருவகை நாவசைப்பு. தாலாட்டுதான் தால் எனக் குறுகியது.
சப்பாணிப்பருவம் - ஒன்பதாம் திங்களில், இரு கைகளையும் ஒருங்கு சேர்த்துக் கைகொட்டும் பருவம்.
முத்தப்பருவம் - பதினோராம் திங்களில் தாய்தந்தையர் தங்களுக்கு முத்தம் தருமாறு இறைஞ்சும் பருவம்.
வருகைப்பருவம் - பதின்மூன்றாந் திங்களில், நடக்க முயலும் குழந்தையைத் தம்பால் நடந்துவருமாறு பெற்றோர் வேண்டுதல்.
அம்புலிப்பருவம் - பதினைந்தாம் திங்களில், குழந்தையுடன் விளையாட அம்புலியை அழைக்கும் பருவம்.
சிற்றிற் பருவம் - பதினேழாம் திங்களில், சிறுமியர் சிறுவீடு கட்டி விளையாட அதனைச் சிறுவர்கள் தம் காலால் அழிக்கும் பருவம்.
சிறுபறப் பருவம் - பத்தொன்பதாம் திங்களில், குழந்தை சிறுபறை கொட்டி விளையாடும் பருவம்.
சிறுதேர்ப் பருவம் - இருபத்தொன்றாம் திங்களில், சிறுதேர் உருட்டி விளையாடும் பருவம்.
இந்நுலின் ஆசிரியர் பகழிக்கூத்தர். செம்பிநாட்டைச் சேர்ந்த சன்னாசிக் கிராமத்தில் வைணவ குலத்தில் பிறந்தவர். தந்தை பெயர் தர்ப்பாதனர்.பகழிக்கூத்தர் கடும் வயிற்று வலியில் துடிக்கும்பொழுது, திருச்செந்தூர் முருகனை நோக்கி, “வலி தீர்; பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” என்றாராம்.
அப்பன் அருளால் வலி தீர்ந்தது. கூத்தரும் முருகன் சந்நிதியில், புலவர்கள், அடியார்கள், முக்காணிகள் எனப்படும் திரிசுந்தரர்கள் கூடியுள்ள அவையில் இப்பிள்ளைத் தமிழைப் பாடினார். அவையோ, கூத்தரைப் பெருமைப்படுத்தாது விட்டுவிட்டது. கூத்தரும் பெரிதுபடுத்தாது, தன்னிருப்பிடமேகித் தன் வேலைகளைக் கவனிக்கலானார்.
அவையோருக்குக் கூத்தரின் பெருமையுணர்த்த, முருகன் தன் மார்பில் அணிந்திருந்த மாணிக்கப் பதக்கத்தை இரவில் கூத்தரின் படுக்கையில் விட்டுச் சென்றுவிட்டார். விடியலில் மாணிக்கப் பதக்கத்தைத் தேடி, அது கூத்தரிடம் உள்ளதெனத் தெரிந்து, தங்கள் தவறுணர்ந்து அவை கூத்தரைப் பெருமைப்படுத்தியது. சரித்திரம் இவ்வளவுதான் கிட்டியது.
இனி பிள்ளைத்தமிழ்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக